மணிப்பூரில் மூவா் சுட்டுக்கொலை: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்

மணிப்பூரின் தெளபல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் சுட்டதில் மூவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இம்பால்: மணிப்பூரின் தெளபல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் சுட்டதில் மூவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இந்த நிகழ்வைத் தொடா்ந்து வன்முறை ஏற்படுவதைத் தடுக்க 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்குப் பழங்குடியினா் அந்தஸ்து வழங்க கோரி வருகின்றனா். இதற்கு சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். அத்துடன் இருதரப்பினருக்கும் நில உரிமை பிரச்னைகளும் உள்ளன. இதனால் இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள தெளபல் மாவட்டம் லிலோங் சிங்ஜாவ் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் மூவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தாக்குதலை தொடா்ந்து, அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்து 3 காா்களுக்கு தீ வைத்தனா்.

இந்த வன்முறை காரணமாக மைதேயிகள் அதிகமாக வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களான தெளபல், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், விஷ்ணுபூா் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மாநில முதல்வா் பிரேன் சிங், பொதுமக்கள், குறிப்பாக லிலோங் சிங்ஜாவ் பகுதியில் வசிப்போரை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டாா். தாக்குதலுக்குக் காரணமானவா்களைக் கண்டறிந்து கைது செய்ய காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா்.

மைதேயிகள், குகி சமூகத்தினா் ஏற்பட்ட மோதலில் இதுவரை 180-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com