விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி உருக்கமான பதிவு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி உருக்கமான பதிவு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அப்போதே, விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை செவ்வாய்க்கிழமை நேரில் திறந்து வைத்து பேசிய மோடி, “சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக விளங்கியவா் விஜயகாந்த்” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்த நிலையில், தனது வலைதளத்தில் விஜயகாந்த் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

“சில நாள்களுக்கு முன்னதாக நாம் பெரிதும் போற்றப்படும், மதிக்கப்படும் தலைவர் விஜயகாந்த்தை இழந்தோம். அவர் அனைவருக்கும் கேப்டனாக இருந்தார். மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர். தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் எனது நெருங்கிய நண்பராக இருந்தார். அவருடன் பல்வேறு தருணங்களில் நெருக்கமாக உரையாடியும், பணியாற்றியும் உள்ளேன்.

விஜயகாந்த் பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தார். இந்திய திரையுலகில் விஜயகாந்தை போன்று சில நட்சத்திரங்கள் மட்டுமே அழியாத முத்திரையை பதித்துள்ளனர். அவர் புகழுக்காக சினிமா உலகில் நுழையவில்லை. அவரது பயணம் ஆர்வமும், விடாமுயற்சியும் கொண்டது. அவரது ஒவ்வொரு படமும் மக்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், ஆழமான சமூகநீதியை பதித்தது.

விஜயகாந்த் எடுத்து நடித்து கதாபாத்திரங்கள் சாதாரண குடிமகனின் போராட்டங்களை பற்றி ஆழமான புரிதலை எடுத்துக் காட்டியது. அநீதி, ஊழல், வன்முறை, பயங்கரவாதம் உள்ளிட்டவைக்கு எதிரான கதாபாத்திரங்களில் அடிக்கடி தோன்றினார். சமூகத்தின் நற்பண்புகள் மற்றும் தீமைகளை அவரது படங்கள் பிரதிபலித்தது. 

திரையுலகில் ஏற்படுத்திய தாக்கத்தோடு நின்றுவிடாமல், அவர் அரசியலிலும் நுழைந்தார். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அரசியல் களத்தில் இறங்கினார்.

தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் கல்வி மற்றும் மருத்துவத்தில் முன்னிலை பெற வேண்டும் என்பதில் எப்போதும் அவர் ஆர்வமாக இருந்தார்.

விஜயகாந்தின் மறைவால் பலர் அவர்களது தலைவரை இழந்துள்ளனர். ஆனால், நான் எனது நெருங்கிய நண்பரை இழந்துள்ளேன். நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றார்.

துணிச்சல், கொடை குணம், ஞானம் மற்றும் வைராக்கியம் ஆகியவை வெற்றிகரமான தலைவரின் நான்கு முக்கிய கூறுகளாக குறள் கூறுகிறது. விஜயகாந்த் இந்த பண்புகளை உள்ளடக்கியிருந்தார்.

அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com