ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை: ராகுல், பிரியங்காவுக்கு அழைப்பில்லை?

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்றும், ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை: ராகுல், பிரியங்காவுக்கு அழைப்பில்லை?

லக்னௌ: காங்கிரஸ் குடும்பத்தில் சோனியா காந்திக்கு மட்டுமே அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்றும், ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் கோயில் தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில், ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்கள், சில நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற வகையில், சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் தலைவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, கோயில் அறக்கட்டளை அழைப்பிதழ் அனுப்பி வருகிறது. அதாவது, முக்கிய கட்சியின் தலைவர், மக்களவை  மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் 1984, 1992ஆம் ஆண்டுகளில் நடந்த ராமர் கோயில் முன்னெடுப்பில் பங்கேற்றவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது.

அந்த வகையில்தான், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டவர்களுக்கும் விரைவில் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. 

அனைவருக்குமானவர் ராமர். அதில் எந்த வேறுபாடும் கிடையாது. எனவே, ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையில் எந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடமளிக்கப்படுவதில்லை என்றும் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், திரிணமூல் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com