பிரிஜ் பூஷனால் எனது குடும்பத்தினருக்கு ஆபத்து: மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்!

பாஜக எம்.பி.யும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது குடும்பத்தை குறிவைப்பதாக சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாஜக எம்.பி.யும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது குடும்பத்தை குறிவைப்பதாக சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தினர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மாலிக், “எங்களுக்கு சஞ்சய் சிங் மட்டும்தான் பிரச்னை. அவரைத் தவிர புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் எங்களுக்கு பிரச்னை இல்லை.

மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உறுதிசெய்ய வேண்டும்.

பாஜக எம்.பி.யும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார். அவரால் எனது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக 2022-ஆம் ஆண்டு இறுதியில் பிரிஜ் பூஷன் சிங்கின் மீது மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.21ஆம் தேதி அவரது ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வானார். அதையடுத்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீர்மல்க அறிவித்தார்.  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்கள் பேசவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com