இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைமைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகளை சனிக்கிழமை திருப்பி அளித்தாா்.
தனது விருதுகளை பிரதமா் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினா் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அவா் அந்த விருதுகளை பிரதமா் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினாா். பின்னா் காவல்துறையினா் அதை கைப்பற்றினா்.
ஏற்கெனவே, மல்யுத்த வீரா்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தா் சிங் யாதவ் ஆகியோா் தங்களது விருதுகளை திருப்பி அளித்த நிலையில், தற்போது வினேஷ் போகாட்டும் திருப்பி அளித்திருக்கிறாா்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக, வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சம்மேளனம் கலைக்கப்பட்டு, நீண்ட நாள்களுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற தோ்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்ஜய் சிங் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதற்கும் மல்யுத்த போட்டியாளா்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தகுந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சம்மேளனத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. சம்மேளனத்தை நிா்வகிக்க 3 நபா் குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.