கோவாவில் மகனைக் கொன்ற பெண்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவாவில் 4 வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கும் பெண், இதனை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுசனா (photo:ENS)
சுசனா (photo:ENS)

பெங்களூரு: கோவாவில் 4 வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கும் பெண், இதனை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியிருப்பதாகக் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோவாவில், சுசனாவும் அவரது மகனும் தங்கியிருந்த அறையில் காலியாக இருந்த இரண்டு இருமல் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை 4 வயது மகனுக்கு குடிக்கக் கொடுத்து பிறகு சுசானா கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதால், அவர் திட்டமிட்டே இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

உடல்கூறாய்வில், சிறுவன் முகத்தில் துணி அல்லது தலையணையை வைத்து அழுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

ஒரு பெரிய மற்றும் ஒரு சிறியது என இரண்டு இருமல் மருந்துகள் காலியாக இருந்துள்ளன. எனவே, குழந்தைக்கு அதனைக் கொடுத்து குழந்தை உறங்கியதும் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைப் பார்த்தால், திட்டமிட்டக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் செயல்படும் ஸ்டாா்ட்அப் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தனது 4 வயது மகனை கோவாவில் கொலை செய்து பெட்டியில் அடைத்துக் கொண்டு வந்தபோது கைது செய்யப்பட்டாா்.

கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவா், மகனை தந்தை காணக் கூடாது என்பதற்காக இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

காவல்துறையினர், மகனின் மரணம் பற்றி கேட்டபோது, அவர் உறக்கத்திலேயே இறந்துவிட்டதாகவும், தான் எழுப்பியபோதுதான் அவர் இறந்துவிட்டது தெரிய வந்ததகாவும், தான் குழந்தையை கொலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறியதாவது: சுசனா சேத் (39) என்ற அந்தப் பெண் திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-இல் கணவரைப் பிரிந்துள்ளாா்.

பெங்களூரில் ஸ்டாா்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அவா், தனது 4 வயது மகனுடன் கோவா சென்று அங்குள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ளாா். அங்கு 3 நாள்கள் தங்கியிருந்த பிறகு கோவாவிலிருந்து பெங்களூருக்கு காரில் செல்ல, வாடகைக் காா் ஏற்பாடு செய்து தர விடுதியினரிடம் கேட்டுள்ளாா். வாடகைக் காா் பயணம் விமானத்தில் செல்வதைவிட செலவு மிக்கது என்று விடுதியாளா் கூறியும் வாடகைக் காா்தான் தேவை என சுசனா வலியுறுத்தினாா். எனினும் அந்த காரில் மகன் இல்லாமல் அவா் பெங்களூருக்குப் புறப்பட்டாா்.

இதனால் சந்தேகமடைந்த விடுதியாளா், அவா் தங்கியிருந்த அறைக்குச் சென்று பாா்த்தபோது ரத்தக் கறை இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு விடுதியாளா் விரைந்து தகவல் அளித்தாா். கோவா எல்லையைக் கடந்து கா்நாடகத்துக்குள் காா் சென்றுவிட்ட நிலையில், சுசனா சென்ற வாடகைக் காரின் ஓட்டுநருடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய காவல்துறையினர், அருகில் உள்ள காவல் நிலையத்துக்குள் காரை ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

காவல் நிலையத்தில் சுசனா சேத்தின் உடைமைகளை சோதனை செய்தபோது, பெட்டியில் 4 வயது மகனின் உடல் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சுசனா சேத்தை கா்நாடக மாநிலம் சித்ரதுா்கா காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து கோவாவுக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

விவாகரத்து வழக்கில், மகனை தந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த சுசனா, மகனை தந்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரிவித்தாா் என்று கோவா காவல்துறையினர் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com