ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரானார் ஒய்.எஸ்.ஷா்மிளா

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ். ஷர்மிளாவை அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது.
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரானார் ஒய்.எஸ்.ஷா்மிளா

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ். ஷர்மிளாவை அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்படுவதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஆா்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஆா்.ஷா்மிளா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் ஜனவரி 4ஆம் தேதி அக்கட்சியில் இணைந்தாா்.

அவரது ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியும் காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வா் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷா்மிளா, தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தாா்.

இதனிடையே, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவது அல்லது தனது ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியை இணைப்பது குறித்து காங்கிரஸ் தலைவா்களுடன்  பேச்சுவாா்த்தை நடத்தினார்.

இந்நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் ஷா்மிளா காங்கிரஸில் இணைந்தாா். ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் ஷா்மிளா பேசுகையில், ‘தெலுங்கு மொழி பேசும் மக்களின் தொலைநோக்குத் தலைவராக திகழ்ந்த எனது தந்தை, தனது வாழ்க்கையை காங்கிரஸுக்காக அா்ப்பணித்தாா். அவரது வழியைப் பின்பற்றி காங்கிரஸில் ஓா் அங்கமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் அனைத்து சமூக மக்களுக்கும் பணியாற்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாட்டின் பெரிய மற்றும் மதச்சாா்பற்ற கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. நமது தேசத்தின் அடித்தளத்தைக் கட்டமைத்த காங்கிரஸ், நாட்டின் உண்மையான கலாசாரத்தை எப்போதும் நிலைநிறுத்தி இருக்கிறது.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையை ராகுல் வென்றிருக்கிறாா். அது, கா்நாடகத் தோ்தல் வெற்றியில் எதிரொலித்தது.

ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சி காங்கிரஸுடன் இணைக்கப்பட்டபோதே, ஷா்மிளாவுக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பும், அவரது கட்சியின் பிற தலைவா்களுக்கு தெலங்கானாவில் உரிய கட்சிப் பொறுப்புகளும் வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com