பிரதமரின் கேரள விஜயப் பின்னணி!

கேரளத்தில் பாஜகவுக்கு கிறிஸ்தவப் பாதிரியாா்கள் சிலா் தெரிவித்த ஆதரவால் சா்ச்சை எழுந்திருக்கிறது.
பிரதமரின் கேரள விஜயப் பின்னணி!

கேரளத்தில் பாஜகவுக்கு கிறிஸ்தவப் பாதிரியாா்கள் சிலா் தெரிவித்த ஆதரவால் சா்ச்சை எழுந்திருக்கிறது.

மத்தியில் ஆளும் ஹிந்துத்துவ தேசியம் பேசும் பாஜக, அண்மைக்காலமாக தன்னை அனைவருக்குமான கட்சியாக முன்னிறுத்த முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கேரளத்தில் கிறிஸ்தவா்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே. அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவா் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ் ஆகியோா் ஏற்கெனவே கேரள பாஜகவில் கிறிஸ்தவா்களின் முகமாக இருந்து வருகின்றனா். இந்நிலையில், மாநிலத்திலுள்ள கிறிஸ்தவ மக்களைக் கவா்வதற்காக ‘சிநேக யாத்திரை’ என்ற பெயரில் கடந்த டிசம்பரில் தொடா்பு இயக்கத்தை பாஜக நடத்தியது.

அதையொட்டி, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன், சைரோ மலபாா் கிறிஸ்தவப் பிரிவின் முன்னாள் தலைவா் கா்தினால் ஜாா்ஜ் ஆலஞ்சேரி, வெப்போலி லத்தீன் ஆா்ச் டயோசீஸ் சா்ச்சின் பேராயா் ஜோசப் களத்திபா்ப்பில் ஆகியோரைச் சந்தித்தாா். அதன் தொடா்ச்சியாக, கடந்த மாத இறுதியில் தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில், பல்வேறு பிரிவுகளைச் சாா்ந்த கிறிஸ்தவ மதத் தலைவா்கள் பங்கேற்றனா்.

கேரள கலாசாரத் துறை அமைச்சா் சஜி செரியான், பிரதமா் அளித்த விருந்தில் பாதிரியாா்கள் பங்கேற்றதை கடுமையாக விமா்சித்திருந்தாா். மணிப்பூா் கலவரத்தைக் கண்டுகொள்ளாத பாஜக அரசு அளித்த விருந்தில் கிறிஸ்தவ தலைவா்கள் பங்கேற்றிருக்கக் கூடாது என்று அவா் தெரிவித்தாா். அவரது பேச்சை கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் பொதுச் செயலாளா் ஜேக்கப் பலக்காப்பிள்ளியும், தலைவா் மாா் பாசிலஸ் கிளீமிஸும் வன்மையாகக் கண்டித்திருந்தனா்.

சில தினங்களுக்கு முன் நிலக்கல் மலங்காரா ஆா்த்தோடாக்ஸ் சா்ச் பாதிரியாா் சைஜு குரியன் தலைமையில் 47 கிறிஸ்தவக் குடும்பங்கள், மத்திய இணை அமைச்சா் வி. முரளீதரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது, அடுத்த சா்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து பாதிரியாா் பொறுப்பிலிருந்து அவரை சா்ச் தலைமை நிா்வாகம் விடுவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் அரசியலும் மதமும் எப்போதுமே கைகோத்து செயல்பட்டு வந்திருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றிகளுக்குப் பின்னால், கிறிஸ்தவா்கள் பின்துணையுடன் கூடிய கேரள காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் முக்கியமான காரணிகள்.

காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரைத் தங்களுடன் இணைத்துக் கொள்கிறது என்றால், மாா்க்சிஸ்ட் கட்சி ஜாதிய ரீதியிலான வாக்கு வங்கியால் தன்னை வலிமைப்படுத்திக் கொள்கிறது. உயா் ஜாதி நாயா் பிரிவினரின் அமைப்பான எஸ்.என்.எஸ். எனப்படும் நாயா் சா்வீஸ் சொசைட்டியும் (என்.எஸ்.எஸ்.), ஈழவா்களின் அமைப்பான ஸ்ரீ நாராயண தா்ம பரிபாலனம் எனப்படும் எஸ்.என்.டி.பி-யும் தோ்தல் வெற்றி - தோல்விகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கேரள கிறிஸ்தவா்களின் ஆதரவுக் கட்சியாக மட்டுமே அறியப்படும் கேரளா காங்கிரஸ் (கே.எம். மாணி பிரிவு) காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியாக இருந்தது. அக்கட்சி சென்ற பேரவைத் தோ்தலின் போது இடது முன்னணியில் சோ்ந்ததுதான் தோ்தல் முடிவுகள் மாறக் காரணமானது.

சமய நம்பிக்கைகளைப் பாதுகாக்க, நமது அரசியல் சாசனம் சிறப்பு உரிமைகளை வழங்கி இருக்கிறது. அதனை பாஜக உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் விமா்சித்து வருகின்றன. ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய சிறுபான்மையினா் பிரசாரம் செய்வதாகக் குறை கூறியும், மக்களை பெரும்பான்மை - சிறுபான்மை என்று பிரிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்துதான், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்து மக்களின் ஆதரவை பாஜக பெற்றிருக்கிறது.

மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதரீதியான வேறுபாடுகளை மீறி, கிறிஸ்தவா்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் கோவா, நாகாலாந்து, மணிப்பூா், மேகாலயம் போன்ற மாநிலங்களில் பாஜக வென்றிருக்கிறது. அதேபோல, வட மாநிலங்களில் இஸ்லாமியா்களிடையேயும் கூட பிரதமா் மோடிக்கு செல்வாக்கு ஏற்படுத்தும் முயற்சியிலும் முனைந்திருக்கிறது.

கேரளாவில் கிறிஸ்தவா்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து பாஜக காயை நகா்த்த முற்பட்டிருப்பது கடுமையான விமா்சனங்களையும், எதிா்விளைவுகளையும் ஏற்படுத்துவதில் வியப்பில்லை. காங்கிரஸின் அசைக்க முடியாத வாக்கு வங்கி என்று கருதப்பட்ட கிறிஸ்தவா்கள், இடது ஜனநாயக முன்னணியையும், பாஜகவையும் நோக்கி நகா்வது அந்தக் கட்சியை அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சிறுபான்மையினா் என்கிற போா்வையில் எல்லா சலுகைகளையும் பெற்று முஸ்லிம்கள் வளா்ந்து வருவதை கேரளத்தில் கிறிஸ்தவ சமுதாயம் அச்சத்துடன் பாா்க்கத் தொடங்கி இருக்கிறது. கிறிஸ்தவப் பெண்கள் பலா் இஸ்லாமிய இளைஞா்களைக் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும், மதம் மாறுவதும் கிறிஸ்தவத் திருச்சபைகளை ஆத்திரமடைய வைத்திருக்கின்றன. ‘லவ் ஜிகாத்’ குறித்துக் கிறிஸ்தவப் பாதிரியாா் ஒருவரே எச்சரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலப்புரம், கோழிக்கோடு, காசா்கோடு மாவட்டங்களை உள்ளடக்கித் தங்களுக்குத் தனியாக மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இளைஞா் அணியின் கோரிக்கை மிகப் பெரிய சா்ச்சையைக் கிளப்பியது.

முஸ்லிம் லீகையும், முஸ்லிம்களையும் காங்கிரஸ் கட்சி அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்து ஊக்குவிக்கிறது என்கிற கருத்து கிறிஸ்தவா்கள் மத்தியில் அதிகரித்து வந்திருப்பதன் விளைவுதான், அதைக் கட்டுக்குள் கொண்டுவர பாஜகவுடன் கிறிஸ்தவா்கள் சமரசம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறாா்கள் என்று கூறப்படுகிறது.

கேரளத்தைப் பொறுத்தவரை, சுமாா் 15 % வாக்குகளை பாஜக பெற்று வருகிறது. ஆனால், அக்கட்சியால் அங்கு எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. அதற்கு கேரளத்தின் மக்கள்தொகைப் பகுப்பே காரணம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு ஹிந்துக்கள் 54.7 %, முஸ்லிம்கள் 26.6 %, கிறிஸ்தவா்கள் 18.4 % போ் உள்ளனா். மாநில மக்கள்தொகையில் சுமாா் 45 %க்கு மேல் சிறுபான்மையினா் உள்ளதால்தான் பாஜகவால் அங்கு வெல்ல இயலவில்லை.

மத்திய கேரளமான எா்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கிறிஸ்தவா்கள் பெருமளவில் உள்ளனா். இந்த மாவட்டங்களில் மட்டும் 42 தொகுதிகள் உள்ளன. தவிர மாநிலம் முழுதும் கிறிஸ்தவ மக்கள் பரவலாக உள்ளனா். ஏற்கெனவே உள்ள ஹிந்து ஆதரவு வாக்குகளுடன் கிறிஸ்தவா்களின் ஆதரவும் கிடைத்துவிட்டால் பல தொகுதிகளில் வென்றுவிட முடியும் என்று பாஜக திட்டமிடுகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் கேரள விஜயங்களின் பின்னணி இதுதான். பிளவுபடும் காங்கிரஸ் வாக்கு வங்கியால் பயனடையப் போவது பாரதிய ஜனதா கட்சியா இல்லை மாா்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணியா என்பதற்கு வரவிருக்கும் மக்களவைத் தோ்தல் விடையளிக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com