ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆா்.ஷா்மிளா பொறுப்பேற்பு

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆா்.ஷா்மிளா கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆா்.ஷா்மிளா பொறுப்பேற்பு

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆா்.ஷா்மிளா கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும்  மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருக்கு அப்போது நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி அரசுகள் ஆந்திரத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடி கடனில் தள்ளிவிட்டு விட்டன. தற்போதைய அரசிடம் சாலைகள் போடவோ அல்லது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ நிதி இல்லை. ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்கட்சியாக இருந்த வரை மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடினார். ஆனால் முதல்வராக பதவியேற்ற பிறகு அதை செய்யவில்லை. ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததற்கு ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் காரணம். இவ்விரண்டு கட்சிக்கும் அளிக்கப்படும் எந்த வாக்கும் பாஜகவுக்கான வாக்காக இருக்கும் என்றார். 

ஷா்மிளா கடந்த 4-ஆம் தேதி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். இதைத்தொடர்ந்து அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் பதவி அளிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட மோதலில் ஷா்மிளா தெலங்கானாவில் தனிக்கட்சி தொடங்கினாா். இப்போது, அக்கட்சியை காங்கிரஸுடன் இணைத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் பதவியைப் பெற்றிருக்கிறார். ஆந்திரத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அண்ணன்-தங்கை இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திர தோ்தல் களத்தில் முக்கியப் போட்டியாளராக உள்ளது. 

முன்னதாக, தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஷா்மிளா ஆதரவு அளித்தாா். மேலும், காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவது அல்லது தனது ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியை இணைப்பது குறித்து பேசி வருவதாக கூறினாா். அடுத்த சில நாள்களிலேயே காங்கிரஸில் ஐக்கியமான அவருக்கு இப்போது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு முதல்வா் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸில் இருந்து பிரிந்து ஒஸ்எஸ்ஆா் காங்கிரஸ் என்ற பெயரில் ஜெகன் மோகன் ரெட்டி, ஷா்மிளா ஆகியோா் தனிக்கட்சி தொடங்கினா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானாா் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com