அயோத்தி ராமா் கோயிலில் 84 வினாடி முகூா்த்த காலம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 வினாடி முகூா்த்த காலத்தில் நிறைவு செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அயோத்தி ராமா் கோயிலில் 84 வினாடி முகூா்த்த காலம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 வினாடி முகூா்த்த காலத்தில் நிறைவு செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தி நகரம் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவில் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா அயோத்தி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ஒவ்வொரு நூறு மீட்டர் தொலைவுக்கு ஒரு மேடை என அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ராமர் பாடல்கள் ஒலித்தபடி, அயோத்தி நகருக்குள் இருப்பவர்கள் அனைவரும் ராமரின் தலைநகரான அயோத்திக்குள் இருப்பதை உணர்வுப்பூர்வமாக உணரும் வகையில் அந்த இசை நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

திரேத யுகத்தில் வனவாசம் முடித்துவிட்டு ராமர் மீண்டும் அயோத்தி திரும்பும் போது இருந்ததைப் போலவே, அந்நகரம் பல்லாண்டு காலத்துக்கு முந்தைய காலத்துக்குத் திரும்பியிருக்கிறது. 

இன்று நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க பிராண பிரதிஷ்டை தொடங்குகிறது. அதாவது, அயோத்தி ராமா் கோயிலில் இன்று நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்படும்.

ராமா் கோயிலில் ஜனவரி 23-ஆம் தேதிமுதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com