
விசாரணைக்கு நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யுமாறு கூறி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பினர். அந்த 7 சம்மன்களையும் அவர் புறக்கணித்தார்.
இதையும் படிக்க | கேரள ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!
அதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு அனுப்பப்பட்ட எட்டாவது சம்மனை ஏற்றுக்கொண்ட ஹேமந்த் சோரனிடம் ஜன.20ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதன் பின்பு, 9வது முறையாக மீண்டும் அழைப்பாணை அனுப்பட்டதையடுத்து, அதிகமான பணிகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அவர் பதில் அனுப்பினார்.
இந்நிலையில் விசாரணைக்காக ஜன.29 முதல் 31க்குள் ஏதேனும் ஒரு தேதி, நேரம் மற்றும் இடத்தை ஹேமந்த் சோரனே குறிப்பிட்டு சொல்லுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அவர் எந்த முடிவும் எடுக்கவில்லையெனில் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜன.20ம் தேதி முதல்வரின் வீட்டில் வைத்தே 7 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
காவல் துணை ஆய்வாளர் பானு பிரதாப் பிரசாத் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை தொடர்ந்து மீண்டும் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தக் கோருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.