
ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மிதிலேஷ் தாக்குர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பட்டியல், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக இருப்பவர் சம்பாய் சோரன். ஜார்கண்டின் செரகில்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் மூத்த அமைச்சரான சம்பாய் சோரன் தனது பணிகளால் 'ஜார்கண்ட் புலி' என்று அழைக்கப்படுகிறார்.
நில மோசடி, சட்டவிடோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் இன்று (ஜன.31) 2வது முறையாக விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 6 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்வதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகை சென்று தனது ராஜிநாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டார்.
ஜார்கண்டில் மூத்த அமைச்சர்களுடன் நேற்று இரவு ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் மற்றும் மூத்த அமைச்சர் சம்பாய் சோரன் என இருவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இதில், பெரும்பாலான உறுப்பினர்கள் சம்பாய் சோரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சின் எம்.பி., மஹுவா மாஜி கூறுகையில், ''முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ளார். அமலாக்கத் துறையுடன் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். சம்பாய் சோரன் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.