
பொய்யும், ஹிந்து மத வெறுப்புணர்வும் சேர்ந்ததுதான் மக்களவையில் ராகுல் காந்தியின் உரை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார்.
அவரின் உரையை விமர்சித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெ.பி. நட்டா பதிவிட்டுள்ளதாவது, ராகுல் காந்தியிடம் எந்தப் பணிவும் இல்லை அல்லது 2024-ல் மூன்றாவது முறையாக வெற்றிகரமாக தோல்வி அடைந்ததை உணரவில்லை என்பதை அவரின் இன்றைய உரை காட்டுகிறது.
ஹிந்துக்களை வன்முறையாளர்கள் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என வெளிநாட்டு தூதர்களிடம் கூறியவரும் இவர்தான். ஹிந்துக்களுக்கு எதிரான அவரின் வெறுப்புணர்வு நிறுத்தப்பட வேண்டும்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளவர் (ராகுல் காந்தி) 5 முறை எம்.பி.யாக இருந்தும், நாடாளுமன்றத்தின் விதிகளும் மரியாதையும் அவருக்குத் தெரியவில்லை. நேரம் மற்றும் அவையின் மதிப்பு மிக்க விவாதத்தை தரம் தாழ்த்தியதாக்கிவிட்டார். அவைத் தலைவரை நோக்கிய அவரின் இன்றைய பேச்சுகள் மோசமான சுவையுடையவை. அவரின் நேர்மை மற்றும் ஆளுமையின் மீது ஆதாரமற்ற கூற்றுகளை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
விவசாயிகள் மற்றும் ஆயுதப் படைகளுக்கான எங்கள் திட்டங்கள் குறித்து ஆதாரமற்ற பொய்களை முன்வைக்கிறார். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அக்னிபாத் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் போதிய விளக்கம் அளித்தனர். எனினும், தனது தனிப்பட்ட தரம்தாழ்ந்த அரசியலுக்காக விவசாயிகளையும், பாதுகாப்புப் படையினரையும் கூட ராகுல் விட்டுவைக்கமாட்டார்.
குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் மிகவும் ஆரோக்கியமானது. ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டிய விவாதத்தை எதிர்க்கட்சியினர் அழிவுகரமானதாக்கினர். கடந்த 60 ஆண்டுகளில் ஒரு எதிர்க்கட்சி தொடர்ந்து 3வது முறையாக மக்களால் புறக்கணிக்கப்பட்டதில்லை. அவர்கள் இவ்வாறே சென்றுகொண்டிருந்தால், அவர்களின் சொந்த சாதனையை அவர்களே முறியடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என விமர்சித்தார் ஜெ.பி. நட்டா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.