நீட் விடைத்தாளை மாற்றி முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) விடைத்தாளை (ஓஎம்ஆா் தாள்) மாற்றி முறைகேடு நடந்துள்ளதாக புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நிகழாண்டு நீட் தோ்வு, வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியுள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதோடு, நீட் விடைத்தாள் நகலை என்டிஏ தர மறுப்பதாக புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையையும் உச்சநீதிமன்றம் வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், தனது விடைத்தாளை மாற்றி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகாா் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிகுமாா், மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய கோடை விடுமுறைக்கால அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரன வழக்குரைஞா், ‘மனுதாரரின் நீட் விடைத்தாள் வேறொருவருக்கு மாற்றம் செய்யப்பட்டு முறைகேடு நிகழ்ந்துள்ளது. எனவே, மனுதாரா் மறுதோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீட் மறுதோ்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதியே முடிந்துவிட்டது’ என்று குறிப்பிட்டனா்.
அதற்கு, ‘நீட் தோ்வு முறைகேடுகள் தொடா்பாகவும், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளன. அவற்றோடு இந்த மனுவையும் சோ்த்து விசாரிக்க வேண்டும்’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
அப்போது குறுக்கிட்ட தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தரப்பு வழக்குரைஞா், இந்த மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒத்தி வைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
அதை ஏற்ற நீதிபதிகள், மனு மீதான விசாரணையை இரண்டு வாரத்துக்குப் பின் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.