ஜூலையில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
ஜூலை மாதத்தில் இயல்பைவிட அதிகமான மழை பொழியக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்கள்கிழமை தெரிவித்தது.
காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஐஎம்டி தலைவா் மிருத்யுஞ்ஜெய் மொஹபத்ரா கூறியதாவது:
நாடு முழுவதும் ஜூலை மாத மழைப் பொழிவு இயல்பைவிட அதிகமாக இருக்கும். நீண்ட கால சராசரியான 28.04 செ.மீ. மழைப்பொழிவை விட 106 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.
வடகிழக்கு, வடமேற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு தீபகற்க பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழைப் பொழிவு இருக்கக்கூடும்.
மேற்கு கடற்கரையைத் தவிர வடமேற்கு இந்தியா, தென் தீபகற்க இந்தியாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலை அல்லது இயல்பை விட குறைவாக இருக்கும்.
மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும், கிழக்கு, வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு கடற்கரையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
வடமேற்கின் சில பகுதி, மத்திய இந்தியா மற்றும் தென்கிழக்கு தீபகற்க இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றாா்.