
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் முடிந்து மக்கள் கலைந்து செல்லும்போது நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, இதுவரை 122-ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கொத்துக்கொத்தாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் உரையாற்றியவர் போலே பாபா. யார் இவர்?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் - எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் கிராமத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் இன்று (ஜூலை 2) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
திறந்த வெளியில் சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பந்தல் அமைத்துள்ளனர். வெயில் மற்றும் புழுக்கத்தின் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் அவதியுற்றதாக கூறப்படுகிறது.
நிகழ்வு முடிந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தின் குறுகிய வாயில்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதே நேரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலே பாபாவை பின் கதவின் வழியாக அழைத்துச் செல்லத் தொடங்கினர். அப்போது, அங்கு ஏற்கனவே கடந்து சென்ற ஆயிரக்கணக்கான மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பின்னால் வந்த கூட்டம் அலைமோத, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள் கீழே விழ, நெரிசலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிகிய வாயிலில் மக்களை அனுப்பியதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மக்கள் கூடியதும், அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அஜாக்கிரதை போன்றவையே இந்த கோர விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சொற்பொழிவாளர் போலே பாபா
நாராயண் சகார் ஹரி அல்லது சகார் விஷ்வ ஹரி என்பதே போலே பாபாவின் இயற்பெயர். ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இவரை பின்பற்றுபவர்கள் உள்ளனர்.
இவருக்கு அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு உள்ளது. அவ்வபோது அரசியல் தலைவர்களை சந்திப்பதையும் வாடிக்கையாகக் கொண்டவர்.
உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தை சேர்ந்தவர் போலே பாபா. தனது கல்வியை முடித்த பிறகு, புலனாய்வுப் பணியகத்தில் (Intelligence Bureau) சில காலம் பணியாற்றியதாக கூறப்படுகிறது. (அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.)
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட பாபா, 1990களின் பிற்பாதியில் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு முழுநேர ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் சமய சொற்பொழிவுகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
ஆன்மிகத்தில் இருந்தாலும் காவி நிறத்திலான அல்லது மத அடையாளப்படுத்தும் எந்த உடையையும் அவர் அணிவதில்லை. சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவரின் சொற்பொழிவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
கரோனா பொதுமுடக்கத்தின்போது கூட்டத்தை நடத்தியதற்காக பலரும் அறியும் வண்ணம் தொலைக்காட்சி, பத்திரிகை என இவர் பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. அவருக்கு எதிராக பல வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
ஹாத்ரஸ் - எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் கிராமத்தில் போலே பாபா இன்று நடத்தியக் கூட்டத்தில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டதாக மாவட்ட காவல் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.