மக்களவையில் பாஜக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் முன்வைத்தார்.
தில்லி விமான நிலைய மேற்கூரை விபத்து முதல் தேர்தல் நன்கொடை பத்திரம் வரை பல்வேறு பிரச்னைகளை எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்பியுமான வேணுகோபால் பேசினார்.
அவர் பேசியதாவது:
“குடியரசுத் தலைவர் உரையில் மக்கள் பெரும்பான்மையுடைய அரசை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் ஏன் அவ்வாறு தெரிவிக்க வேண்டும்? அரசுக்கே அதில் நம்பிக்கையில்லை. பாஜக ஆட்சியில் இருப்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால், 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறியவர்கள் 240-ஆக குறைந்துள்ளனர். இந்த 240 தொகுதிகளின் வெற்றியும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உதவியுடன் பெற்றுள்ளீர்கள். தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தியுள்ளீர்கள். இல்லையென்றால் அதிகபட்சம் 140 இடங்களை மட்டுமே பெற்றிருப்பீர்கள்.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற எவ்வித உதவியுமின்றி நாங்கள் 234 தொகுதிகளில் வென்றுள்ளோம். இது தார்மீக வெற்றியாகும். தார்மீக ரீதியில் நீங்கள் தோல்வி அடைந்துள்ளீர்கள்.
வயநாட்டிலும், ரேபரேலியிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என்று கூறினார்கள். பிரதமர் நரேந்திர மோடி பெற்ற வித்தியாசத்தைவிட இரு மடங்கு அதிகம் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது பல முறை விதிமுறைகளை மீறி ஜனநாயகத்துக்கு எதிராக மோடி பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் பல புகார்கள் அளித்தும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.
காந்தி, கோட்சே இருவரும் பகவத் கீதை படித்துள்ளார்கள். ஆனால், காந்தி அகிம்சை, பெண்களுக்கு மரியாதை அளிப்பது உள்ளிட்டவை கற்றுக் கொண்டார். கோட்சே வன்முறை, கொலை உள்ளிட்டவை கற்றுள்ளார். நாங்களும் இந்தியா கூட்டணியும் காந்தியின் ஹிந்துத்துவாதத்தை கடைபிடிக்கிறோம்.
இரண்டு தொழிலதிபர்களின் பெயரை அவையில் யார் பேசினாலும் ஒட்டுமொத்த ஆளுங்கட்சியினரும் குதிக்க தொடங்கிவிடுவார்கள்.
நான் சில பிரச்னைகளை எழுப்ப விரும்புகிறேன். தில்லி, ஜபல்பூர், ராஜ்கோட் விமான நிலையங்களின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது, அயோத்தி சாலைகள் மோசமடைந்தது, ராமர் கோயிலில் கசிவு, மும்பை துறைமுக இணைப்பு சாலையில் விரிசல், பிகாரில் பாலங்கள் இடிந்து விழுந்தது என அனைத்தும் தேசிய ஜனநாயக அரசின் கால கட்டத்தில் விழுந்துள்ளது. இவர்களின் ஆட்சியில் கட்டப்படும் ஒவ்வொரு கட்டடமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
பாஜகவுக்கு நன்கொடை கொடுக்க மறுத்தால் அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணைக்கு வரும். உடனடியாக தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நன்கொடை வந்துவிடும். தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் மோடி அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாடு காணாத மிகப் பெரிய ஊழல் இது.
கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளன. அரசுத் தரப்பில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டது? பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.