

தமிழகம் மற்றும் கேரளத்தில் பாஜக வளர்ந்து வருவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்று வருவதாகவும், கேரளத்தில் பாஜக தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 2) உரையாற்றினார்.
இதில், தென்மாநிலங்களில் பாஜக வளர்ச்சியைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாகக் கூறினார். திரிச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு பேசிய அவர், கேரளத்தில் பாஜக வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல் நடத்த 4 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணாவிலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பு.
அவர்கள் 100க்கு 99 பெறவில்லை. 543க்கே 99தான் பெற்றுள்ளனர். 100க்கு 99 இடங்களில் வெற்றி பெற்றதைப் போன்று பேசுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
காங்கிரஸ் இனி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கூச்சலிட்டபடியே இருக்க வேண்டியதுதான். மக்களின் தீர்ப்பை நேர்மையாக புரிந்துகொள்ள முயல வேண்டும். மக்கள் தீர்ப்பை போலி வெற்றியாக சித்தரிக்கக் கூடாது.
தேர்தல்களில் தோல்வி அடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துள்ளது என விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.