
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி அறிவித்திருக்கும் நிலையில், அது நடைமுறைக்கு வர ஒரு சில மணி நேரங்களே உள்ளன. ஆனால், விலை உயர்விலிருந்து தப்பிக்க ஒரு வழி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜியோ, மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது மாதக் கட்டணத்தை அதிகரித்துவிட்டன. ஆனால், நமது செல்போன் சேவை முடிய இன்னும் ஒரு சில நாள்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ஒரு சில நாள்களில் சில நூறுகளை அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை வெளியாகியிருக்கிறது.
ஜூலை 3ஆம் தேதிக்குள் இருக்கும் அதே பழையக் கட்டணத்தை அடுத்த மாதம் வரை பயன்படுத்த ஒரு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தற்போது, ஏர்டெல் மற்றும் ஜியோவில், நீங்கள் எந்த பிளானை ரீசார்ஜ் செய்திருக்கிறீர்களோ, அதே ரீசார்ஜ் தொகையை இன்று மீண்டும் ரீசார்ஜ் செய்தால், அது உங்கள் தற்போதைய பிளான் முடிவடைந்த மறுநாள் முதல் ஆக்டிவ் ஆகும். தற்போது விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டுவிட்டதால் நீண்ட கால திட்டங்களை ஜியோ ஏற்கனவே நீக்கிவிட்டது. ஆனால் மாதக் கட்டணம் பயன்பாட்டில் உள்ளது. மாதக் கட்டணத்தை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்திருப்பவர்கள், அதே பிளானை மீண்டும் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டால், அடுத்த ஒரு மாதத்துக்கு உங்களால் விலை உயர்விலிருந்து தப்பிக்க முடியும் என்கின்றன தகவல்கள்.
ஒருவேளை, நீங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனராக இருந்தால், உங்கள் ரீசார்ஜ் திட்டத்தை முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து ஷெட்யூல் செய்து கொள்ளலாம். அதாவது, இந்த மாதம் முழுக்க ரீசார்ஜ் இருந்தாலும், அதே திட்டத்தை மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்வதன் மூலம் அடுத்த மாதத்துக்கும் அதே திட்டத்தைக் குறைந்த கட்டணத்தில் பெற முடியும் என்கிறார்கள். ஆனால், இந்த திட்டம் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே பொருந்துமாம்.
ஜியோ பயனர்கள், தற்போதிருக்கும் எந்த திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களது தற்போதைய ரீசார்ஜ் காலம் முடிந்த பிறகுதான், அடுத்த திட்டம் ஆக்டிவ் ஆகும். ஏர்டெல் பயனர்கள், தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே ரீசார்ஜ் தொகையைத்தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். மாற்றி வேறு திட்டத்தை ரீசார்ஜ் செய்துவிட்டால், அது தற்போது முதலே நடைமுறைக்கு வந்துவிடும். அதே திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் அது தானாகவே ஷெட்யூல் ஆகிவிடும்.
வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த வசதி கிடைக்காது. எத்தனை ரீசார்ஜ் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வந்துவிடும்.
ஏர்டெல் நிறுவனத்தில் இதுபோல எத்தனை ரீசார்ஜ்களை ஷெட்யூல் செய்ய முடியும் என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், ஜியோவில் இதுபோல 50 ரீசார்ஜ் வரை ஷெட்யூல் செய்து வைத்துக் கொள்ளலாம் என்கின்றன தகவல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.