இந்திய நகரங்களில் ஏற்படும் இறப்புகளில் 7% காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன: ஆய்வில் தகவல்!

காற்று மாசுபாட்டால் 7% மேற்பட்ட இறப்புகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏற்படுவதாக ஆய்வில் தகவல்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் 10 பெரிய நகரங்களில் ஏற்படும் இறப்புகளில் 7 சதவீதத்திற்கு மேற்பட்டவை காற்று மாசுபாட்டினால் ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லி உள்பட புகைமூட்டம் நிறைந்த உலகின் மிக மோசமான காற்று மாசு நிறைந்த இந்திய நகரங்களில் வசிப்பவர்கள் நுரையீரல் கோளாறுகள் மற்றும் பல சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியர் ஒருவரின் தலைமையிலான ஆய்வுக்குழு செய்த புதிய ஆய்வொன்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நுண்துகள்களான பி.எம். 2.5 மாசுபடுத்திகள் குறித்து அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஹைதராபாத், கல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 2008 முதல் 2019 ஆண்டு வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 33,000 இறப்புகள் பி.எம். 2.5 நுண்துகள்களின் வெளிப்பாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் இதன் அளவு ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம்கள் மட்டுமே இருக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாகவும், ஆனால் 4 மடங்கு அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
15 நாள்களில் 9! நேற்று மட்டும் 3 பாலங்கள்! புதிய சாதனை படைக்கும் முன் முதல்வர் ஆலோசனை

லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னலில் வெளியான ஆய்வில், 2008 முதல் 2019 ஆண்டுகளில் 7.2 சதவீத இறப்புகளுக்குக் காற்று மாசுபாடு காரணமாகக் கூறப்படுகிறது.

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 12,000 இறப்புகளுடன் இந்தியத் தலைநகரான தில்லி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த இறப்புகளில் 11.5 சதவீதம் அங்கு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை மிக மோசமான பாதிப்பாகக் கருதாத மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்தியாவில் காற்றின் தர நிலைகள் குறித்து சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

”காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்தியாவில் அதற்கானக் கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று ஆய்வாலர் ஜோயல் ஸ்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பரிந்துரைக்கப்பட்ட காற்று மாசுபாடு அளவைவிட அதிகளவு மாசுபாட்டை சுவாசிக்கின்றனர். இது பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்களை உருவாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com