மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 31,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சராசரியாக மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாளைக்கு 28 பெண்களும், 3 சிறுமிகளும் காணாமல் போவதாகவும், காணாமல் போன பெண்கள் குறித்து இதுவரை மொத்தம் 724 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் 676 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அதிர்ச்சிகரமாக இது தொடர்பாக ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை.
இந்தூரில் அதிகபட்சமாக 2,384 பெண்கள் காணாமல் போயுள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் 479 பெண்கள் காணாமல் போனதாகவும், இது தொடர்பாக 15 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சாகர் மாவட்டத்தில் பெண்கள் காணாமல் போனதாக 245 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரான பாலா பச்சன் சட்டப்பேரவையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பின்னரே இந்தப் புள்ளிவிவரங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி, கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 2 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளதாகப் பதிவாகியுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த மொத்த எண்ணிக்கையில் 68% பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள். இதில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவிலேயே அதிகமாக மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெண்கள் காணாமல் போவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு ஜூலை 26 மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் அஜய் மிஸ்ரா, 2019-ல் 82,084 சிறுமிகளும், 3,42,168 பெண்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்சிஆர்பி தனது அறிக்கையில் மனநோய், தகவல் தொடர்பு பிரச்னை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை போன்ற பிரச்னைகளால் பெண்கள் பெரும்பாலும் காணாமல் போவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.