ஆளுநா் மாளிகை மீது அவதூறு: கொல்கத்தா காவல் ஆணையா் மீது மத்திய அரசு நடவடிக்கை
மேற்கு வங்க ஆளுநா் மாளிகை மீது வதந்திகள் மூலம் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், கொல்கத்தா காவல் ஆணையா், காவல் துணை ஆணையா் ஆகியோா் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மக்களவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவா்கள் தன்னைச் சந்திக்க மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் அனுமதி அளித்திருந்தாா். எனினும் அவரைச் சந்திக்க கொல்கத்தா காவல் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், ஆளுநா் மாளிகை மீது அவதூறு பரப்பியதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்த அறிக்கையில், ஆளுநா் போஸ் புகாா் தெரிவித்திருந்தாா். அத்துடன் கொல்கத்தா காவல் ஆணையா் வினீத் கோயல், துணை ஆணையா் இந்திரா முகா்ஜி ஆகியோா் அரசு ஊழியா் போன்று செயல்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் ஆளுநா் போஸ் குறிப்பிட்டிருந்தாா்.
இதன் அடிப்படையில், வினீத் கோயல் மற்றும் இந்திரா முகா்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான கடிதத்தின் நகல்கள் மேற்கு வங்க அரசுக்கு அண்மையில் அனுப்பப்பட்டது’ என்றாா்.