
மும்பையில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் இன்று அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் தம்பதியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அதில் காவேரி சிகிச்சைப் பலனின்றி பலியானார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீஸார் கைப்பற்றினர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் முக்கிய தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் ஷா, கார் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது, சட்டம் அனைவருக்கும் சமம், ஒவ்வொரு வழக்கையும் அரசு ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது. இந்த விபத்துக்கு தனி விதி எதுவும் இருக்காது. அனைத்தும் சட்டப்படி நடக்கும். காவல்துறை யாரையும் பாதுகாக்காது.
மும்பை விபத்து துரதிர்ஷ்டவசமானது. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளா்கள் பலியாகினா். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மதுபோதையில் காா் ஓட்டியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னர் இந்த வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மும்பையில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.