
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ரஷியா சென்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூன்றாவது முறையாக இன்று மணிப்பூர் சென்றிருப்பதாகவும், பிரதமருக்கு மணிப்பூர் செல்ல ஒரு சில மணி நேரம் கூட கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் விமரிசித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் வலைப்பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருப்பதாவது, இன்று, கடவுளின் அவதாரமான பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றிருக்கிறார், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அசாம் மற்றும் மணிப்பூர் செல்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
ரஷியா -உக்ரைன் போரை கடவுளின் அவதாரமான பிரதமர் நரேந்திர மோடி முடிவுக்குக் கொண்டு வருவார் என்று ஒருகாலத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆச்சரியப்படும் அளவில், தற்போது பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணம் குறித்து இன்னும் விநோதமான காரணங்கள் கூறப்படலாம் என்று பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்த பிறகு, 14 மாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் மூன்றாவது பயணம் இது.
மே 3, 2023 அன்று கடுமையான வன்முறை வெடித்த பிறகு இதுவரை, ஒரு சில மணிநேரங்களுக்கு கூட மணிப்பூருக்குச் செல்ல கடவுளின் அவதாரமான பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது விரும்பவில்லை" என்றும் அவர் கூறினார்.
"அவர், பாதிக்கப்பட்ட மாநில முதல்வரையோ - அவர் தனது சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களையோ - அல்லது அந்த மாநிலத்தின் பிற அரசியல் கட்சித் தலைவர்களையோ, மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களையோ கூட சந்திக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
22-வது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அதிபர் விளாதிமீர் புதினின் அழைப்பின் பேரில் மோடி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரஷியா சென்றுள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தில்லியிலிருந்து இன்று மணிப்பூர் செல்கிறார். திங்கள் காலை தில்லியிலிருந்து சில்சார் வரை விமானத்தில் பயணம் செய்து அங்கிருந்து ஜிரிபாம் மாவட்டத்திற்கு சாலை மார்கமாகச் செல்கிறார். அங்கு கடந்த ஜூன் மாதத்திலும் கூட புதிய வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன.
மணிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லும் ராகுல், அவர்களிடம் உரையாடி, குறைகளைக் கேட்டிறிய விருக்கிறார் என்று கூறப்படுகிறது.
வன்முறை வெடித்த மணிப்பூருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்குச் சென்ற ராகுல், தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் நியாய யாத்திரையின்போதும் மணிப்பூர் சென்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.