உச்சத்தில் லாபப் பதிவு: 427 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான சரிவு என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தையில் புதன்கிழமை லாபப் பதிவு வந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், கடந்த சில நாள்களாக சந்தை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக வங்கி, ஆட்டோ, மெட்டல், ஐடி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு மீதான நிச்சயமற்ற தன்மையும் உள்நாட்டுச் சந்தையில் பலவீனமான போக்கை அதிகரித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.23 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.450.05 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.314.46 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,416.46 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 129.72 புள்ளிகள் கூடுதலுடன் 80,481.36-இல் தொடங்கி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், 79,435.76 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 426.87 புள்ளிகளை (0.53 சதவீதம்) இழந்து 79,924.77-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,021 பங்குகளில் 1,363 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,576 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 82 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை குறைந்தது: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எசியன் பெயின்ட், பவர்கிரிட், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்ஃபார்மா, அதானி போர்ட்ஸ் உள்பட 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 109 புள்ளிகள் வீழ்ச்சி : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,459.85-இல் தொடங்கி 24,461 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், 24,141.80 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 108.75 புள்ளிகளை (0.45 சதவீதம்) இழந்து 24,324.45-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com