
உத்தரப் பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களை இன்று பிற்பகலில் பார்வையிடுகிறார் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
கனமழையால் ரப்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் பல்ராம்பூர், துளசிபூர், உத்ராலா தாலுகாவில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்ராம்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நேபாளத்திலிருந்து கீழ்நோக்கி வரும் நீர்வரத்து காரணமாகவும் ரப்தி ஆறு அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.
வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் படகுகள் மூலம் மீட்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கி இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஹரிஹர்கஞ்ச் லாலியா சாலையில் உள்ள லவுகாஙஹவா கிராமத்திற்கு அருகே மூன்று அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்கிறது. இதனால் நடந்துசெல்பவர்கள் மற்றும் சிறிய வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று லாலியா மகராஜ்கஞ்ச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மறுபுரம் துளசிபூர் கௌரா சாலையில் ஒரு அடிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு 32 வெள்ளச் சாவடிகள், எஸ்டிஆர்எஃப் குழு, வருவாய் மற்றும் சுகாதாரத் துணைக்குழு ஆகியவற்றை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 25 படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மாநில நீர்வளம் மற்றும் வெள்ள நிவாரண அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங், மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
நேபாளம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், ரப்தி, சரயு ஆகிய ஆறுகள் நிரம்பியுள்ளது, ஆனால் அரசு நிர்வாகம் விழிப்புடன் இருப்பதாகவும் ஸ்வதந்த்ரா தேவ் சிங் கூறினார்.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிற்பகல் பல்ராம்பூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆதித்யநாத், பல்ராம்பூர் சோனார் கிராமத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.