
பிகார் மாநிலத்தில் புதன்கிழமை காலை மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த 18 நாள்களில் இடிந்து விழுந்த 13-வது பாலம் இதுவாகும்.
சஹர்சா மாவட்டம் மஹிசி கிராமத்தில் பாலம் இடிந்து விழுந்தததில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து துணை ஆட்சியர் ஜோதிகுமார் கூறுகையில், சம்பவ இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளது. இது சிறிய பாலம், இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. முதல்கட்ட அறிக்கைக்காக காத்திருக்கிறோம், கிடைத்தவுடன் செய்தியாளர்களுடன் பகிர்கிறோம் எனத் தெரிவித்தார்.
சஹர்சா மாவட்டத்தில் வெள்ள நீரில் பாலம் அடித்துச் செல்லும் விடியோ இணையத்தில் பரவி வைரலானது. இந்த பாலம், கடந்த 2010ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் சட்டப்பேரவை உறுப்பினர் ரத்னேஷ் சதாவின் நிதியில் கட்டப்பட்டது. ரத்னேஷ் தற்போது பிகார் அமைச்சராக உள்ளார்.
மஹிசி மற்றும் நவ்ஹட்டா கிராமங்களை இணைக்கும் இந்த பாலம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 17-ஐ கிராமங்களுடன் இணைக்கும் ஒரே பாலம் இதுவாகும்.
இந்த பாலத்தை 48 மணிநேரத்துக்குள் சரிசெய்து போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்ட அதிகாரி அனில் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 நாள்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 பொறியாளர்களை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்திருந்தது.
பாலம் இடிந்து விழும் விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகார் மக்களுக்கு இரட்டை இயந்திர ஆட்சியின் பரிசு எனத் தெரிவித்திருந்தார்.
பிகாரில் இடிந்த முக்கிய பாலங்கள்
ஜூன் 18 அராரியா (பக்ரா நதி)
ஜூன் 22 சிவன் (கண்டக் நதி)
ஜூன் 23 கிழக்கு சம்பாரன்
ஜூன் 27 கிஷன்கஞ்ச்
ஜூன் 30 கிஷன்கஞ்ச்
ஜூலை 3 சரண் (இரண்டு பாலங்கள்)
ஜூலை 3 சிவன் (மூன்று பாலங்கள்)
ஜூலை 4 கிழக்கு சம்பாரண் (இரண்டு பாலங்கள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.