
ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த அன்ஷுமான் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில், அவரது நெருங்கிய வாரிசு உரிமை விதியில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தன்னுயிரை பணயம் வைத்து, சக ராணுவ வீரர்கள் நான்கு பேரை காப்பாற்றியிருந்தார் கேப்டன் அன்ஷுமான் சிங். அவருக்கு, இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் இரண்டாவதாக இருக்கும் கீர்த்தி சக்ரா விருது ஜூலை 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது.
இவ்விருதினை அன்ஷுமான் சிங் மனைவியும், தாயாரும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில்தான், அன்ஷுமான் பெற்றோர், மத்திய அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், தங்களது மகனின் மனைவி இனி ஒருபோதும் தங்களுடன் வசிக்கப்போவதில்லை. எனவே, இந்திய ராணுவத்தில், ராணுவ வீரர்களுக்குப் பிறகு அவர்களது நெருங்கிய உறவினர் அல்லது அவர்களது வாரிசு என்ற விதியில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு ராணுவ வீரரின் மரணத்துக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து அன்ஷுமான் சிங் தந்தை ரவி பிரதாப் சிங் கூறுகையில், எங்களது மருமகள் ஸ்மிருதி சிங் எங்களுடன் வசிக்கவில்லை. ஆனால், எங்களது மகனின் மரணத்துக்குப் பிறகுஅவருக்குத்தான் அனைத்து பணப்பலன்களும் கிடைத்திருக்கிறது.
எனவே, நெருங்கிய வாரிசு என்று கொண்டுவரப்பட்டிருக்கும் விதிமுறை சரியாக இல்லை. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியிருக்கிறோம். திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. அவர்களுக்குக் குழந்தையும் இல்லை. மகன் மரணமடைந்த பிறகு அவரது மனைவி எங்களுடன் வசிக்கவில்லை. இப்போது எங்களிடம் மகனின் புகைப்படமும் அதற்குப் போடப்பட்ட மாலையும்தான் இருக்கிறது என்கிறார்.
எனவே, மரணமடையும் ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவினர் அல்லது வாரிசு தொடர்பான விதியில் மாற்றம் செய்ய வேண்டும். ராணுவ வீரர்கள் மரணமடையும் நிலையில், அவரது மனைவி வீரரின் குடும்பத்துடன் இருக்கிறாரா என்பதையும், யார் உண்மையிலேயே அவரை நம்பியிருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த விதியில் திருத்தம் மேற்கொண்டால், எங்களைப் போல பல பெற்றோர் காப்பாற்றப்படுவார்கள் என்கிறார்கள்.
ஒருவர் ராணுவத்தில் சேரும்போது, அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்தான், அவருக்கு அடுத்த நெருங்கிய உறவினராக சேர்க்கப்படும். ஒருவேளை ராணுவ வீரருக்கு திருமணமாகிவிட்டது என்றால், அவரது வாழ்க்கைத் துணையின் பெயர் சேர்க்கப்படும்.
திருமணமான இரண்டு மாதத்தில், குடும்பத்தை விட்டுவிட்டு, சியாச்சின் மலைப்பகுதிக்குச் சென்று ராணுவ முகாமில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்த அன்ஷுமான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீர மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.