
ஆக்ரா: ஹாத்ரஸ் சம்பவத்தில் 121 பேர் பலியான நிலையில், அந்த சம்பவத்துக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த சூரஜ்பால் சிங் என்னும் போலே பாபா, பிறந்தவர்கள் ஒருநாள் சாகத்தான் வேண்டும், மரணம் என்பது விதி என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹாத்ரஸ் சம்பவத்தை ஓரளவுக்கு மக்கள் மறந்துவிட்டு, அம்பானி திருமணம் குறித்துப் பேசத் தொடங்கிவிட்டதால், இதுநாள் வரை வேறொரு இடத்தில் தங்கியிருந்த போலே பாபா, தனது மனைவி மற்றும் வழக்குரைஞருடன் மெயின்புரியில் உள்ள காஸ்கஞ்ச் ஆசிரமத்துக்குத் திரும்பியிருக்கிறார்.
ஆசிரமத்தில், ஹாத்ரஸ் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், யாராக இருந்தாலும் ஒருநாள் சாகத்தான் வேண்டும், யார் இந்த உலகில் பிறந்தாலும், அவர்கள் ஒரு நாள் செத்துத்தான் ஆக வேண்டும் என்று அருள்வாக்குக் கூறியிருக்கிறார்.
ஹாத்ரஸ் சம்பவம் குறித்து மேலும் அவர் விவரிக்கையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், என் மீது பொறாமை கொண்ட சிலர்தான், நிகழ்ச்சி நடந்த இடத்தில் விஷ வாயுவைக் கசிய விட்டிருக்கிறார்கள். என் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே இது நடந்திருக்கிறது என்று கூறுகிறார்.
ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பிறகு, அவரது அனைத்து ஆசிரமங்களிலும் மத வழிபாடுகள் குறைக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனினும், ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், போலே பாபாவின் பெயரே இடம்பெறவில்லை என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவரது இந்த இனியசொற்களைக் கேட்க வந்துதான் 121 பேர் தங்களது குழந்தை, குடும்பத்தை விட்டு தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
சம்பவத்தின் பின்னணி?
உத்தரப் பிரதேசம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், ‘போலே பாபா’ என்ற தன்னை ஆன்மிக குரு என்று கூறிக்கொள்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.
மாலையில் நிகழ்ச்சி முடிந்து அரங்கைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெண்கள்.
நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாத ஒருங்கிணைப்பாளா்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. நிகழ்ச்சிக்கு 80,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக சுமாா் 2.5 லட்சம் போ் வரையில் கூட்டம் கூடியிருப்பதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.