
சத்ரபதி சிவாஜி முகாலய படைத் தளபதி அப்சல் கானைக் கொல்லப் பயன்படுத்திய ‘வாக் நாக்’ எனப்படும் புலி நக ஆயுதம் லண்டனிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாகாராஷ்டிரத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கும் சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதம் வருகிற ஜூலை 19 அன்று இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிரத்தின் சதாராவில் உள்ள ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் விழா நடத்தப்பட்டு அந்த புலி நக ஆயுதம் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.
கடந்தாண்டு, மாகாராஷ்டிர அமைச்சர்கள் சுதிர் முங்கந்திவார் மற்றும் உதய் சமந்த் இருவரும், லண்டன் அருங்காட்சியகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதத்தை 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு கொடுக்க சம்மதித்துள்ளனர்.
அமைச்சர் சுதிர் முங்கந்திவார் பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், “சத்ரபதி சிவாஜி மகாராஜா 1659-ல் அப்சல் கானைக் கொல்வதற்கு இந்த புலி நக ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டினை நாம் கொண்டாடவுள்ளோம். எனவே, அவர் பயன்படுத்திய புலி நக ஆயுதம் மக்கள் பார்வைக்குக் சிவாஜி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது” என்று கூறினார்.
சதாராவில் உள்ள பிரதாப்கர் கோட்டை அடிவாரத்தில்தான் அப்சல்கானை சிவாஜி கொன்றார். ஆகையால், புலி நக ஆயுதத்தைக் காட்சிப்படுத்த சதாரா அருங்காட்சியகம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.