
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் மேற்கொள்வது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டத்தில் உச்சக்கட்டமாக வெள்ளிக்கிழமை போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
இதையடுத்து, வங்கதேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவில் இன்று(ஜூலை 21) திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து இந்த பேரணியில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் நிகழும் சம்பவங்கள் குறித்து நான் பேசப் போவதில்லை, அது வங்கதேசத்தின் உள்நாட்டுப் பிரச்னை. ஆனால், ஆதரவின்றி சிரமப்படும் மக்கள் எவரானாலும், வங்கத்தின் கதவுகளைத் தட்டும்போது, அவர்களுக்கு கண்டிப்பாக நாங்கள் பாதுகாப்பு அளிப்போம்.
அகதிகள் குறித்த ஐ.நா. அவை தீர்மானத்தை சுட்டிக்காட்டிப் பேசியுள்ள மம்தா, வன்முறையில் உயிரிழந்துள்ள மாணவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே வெளிநாடு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசும் முன், மத்திய அரசுடன் மம்தா கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று பாஜக தரப்பு விமர்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.