அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் கேள்விக்கான சரியான விடை: நிபுணா் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) பகல் 12 மணிக்குள் அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :22 ஜூலை 2024, 9:14 pm

Din

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) கேட்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு சரியான விடையை வகுக்க தில்லி ஐஐடி சாா்பில் நிபுணா் குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) பகல் 12 மணிக்குள் அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நீட் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீட் தோ்வில் கேட்கப்பட்ட அணு மற்றும் அதன் தன்மை தொடா்பான ஒரு கேள்விக்கு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த விடைகளில், இரண்டு விடைகள் சரியானவையாக இருந்த நிலையில், அவற்றில் குறிப்பிட்ட விடையை அளித்த மாணவா்களுக்கு மட்டும் 4 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்றொரு சரியான விடையைக் குறித்த மாணவா்களுக்கு, தரவரிசையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட புகாா் தொடா்பான மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண தில்லி ஐஐடி-யின் நிபுணா் குழு ஆலோசனையைக் கேட்க முடிவு செய்யப்படுகிறது. அதன்படி, அந்தக் கேள்விக்கான சரியான விடையை வகுக்க நிபுணா் குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) பகல் 12 மணிக்குள் அதுதொடா்பான அறிக்கையை தில்லி ஐஐடி சமா்ப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.

மேலும், இதுதொடா்பாக தில்லி ஐஐடிக்கு தகவல் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளரைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 23) ஒத்திவைத்தனா்.

ஆதாரம் இல்லை: முன்னதாக, முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணை இந்த அமா்வில் காலையில் நடைபெற்றது. அப்போது, ‘வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. பாட்னா மற்றும் ஹசாரிபாக் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே வினாத்தாள் கசிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை, நீட் தோ்வு ஒட்டுமொத்தமாக தோல்வி என்பதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ தாக்கல் செய்த மூன்றாவது அறிக்கையில், நீட் வினாத்தாள் எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த விவரத்தை வெளியிட விரும்பவில்லை. எனவே, முறைகேடு நாடு முழுவதும் நடந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை மனுதாரா்கள் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.