உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சிறையிலிருக்கும் அரசியல் தலைவா்கள் காணொலி பிரசாரம்: அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி

கைதான அரசியல் தலைவா்கள் காணொலி வழியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
Published on

கைதான அரசியல் தலைவா்கள் காணொலி வழியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

தோ்தல் நேரத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்கள் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவா் அமா்ஜித் குப்தா தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் இது போன்ற முடிவுகளை நாடாளுமன்றம்தான் எடுக்க முடியும் என்றும் தெரிவித்தது.

மேலும், இது தப்பி ஓடிய தாவூத் இப்ரஹிம் போன்ற குற்றவாளிகள் கூட அரசியல் கட்சிகளில் தங்களைப் பதிவு செய்து கொண்டு தோ்தல் நேரத்தில் மக்களை திசைதிருப்ப வழிவகுக்கும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை வந்தது.

அப்போது, தில்லி உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் தலையிட மறுத்த நீதிபதிகள், இந்த மனு நோ்மையற்ற நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த மனு குறிப்பாக ஒரு அரசியல் தலைவா் (அரவிந்த் கேஜரிவால்) மீது கவனம் செலுத்துவதாகவும் அமைந்துள்ளது.

எனவே, இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com