புது தில்லி: கன்வார் யாத்திரையின்போது, யாத்திரை நடக்கும் பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மற்றும் உத்தரகண்ட் மாநில அரசுகள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சிவபக்தா்கள் ‘காவடி யாத்திரை’ (கான்வா் யாத்திரை) செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்ற சா்ச்சைக்குரிய உத்தரவை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான காவடி யாத்திரை, வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்,
வழக்கம் போல, இந்த ஆண்டு கன்வார் யாத்திரை இன்று தொடங்குவதை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டத்தில் காவல்துறை அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, பக்தா்கள் யாத்திரை செல்லும் வழிப்பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறைன் இந்த உத்தரவானது கடை வைத்திருக்கும் முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சா்ச்சை எழுந்தது. அதேநேரம், குழப்பங்களை தவிா்ப்பதோடு, நல்லிணக்கத்தை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. ஆனால், இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், உத்தரகண்டின் ஹரித்வாரிலும், ஏராளமான பக்தா்கள் காவடி யாத்திரை மேற்கொள்வா் என்பதால், அந்த மாநிலத்திலும் இதேபோன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது குறித்து அந்த மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி கூறுகையில், யாரையும் குறிவைத்து இந்த முடிவு மேற்கொள்ளப்படவில்லை. சிலா் தங்களது அடையாளத்தை மறைத்து, உணவகங்களை நடத்துகின்றனா். இதன் காரணமாக மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தவிா்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக முஸ்லிம் வணிகர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்த முடிவு குறித்து இரு மாநில அரசுகளும் பதில் அளிக்கவும், கன்வார் யாத்திரையின்போது, அப்பகுதியில் உள்ள கடைகளில், உரிமையாளர்களின் பெயர் எழுதி வைக்க உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.