நிதீஷ் குமார், விவேக் பாலி
நிதீஷ் குமார், விவேக் பாலி

பாஜக கூட்டணி வேண்டாம்: நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை

மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாருக்கு ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாருக்கு ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசில் பாஜக கூட்டணியில் முக்கியக் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் திகழ்கிறது. அதேபோல பிகாரில் பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமாா் முதல்வராக இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு பொதுச் செயலா் விவேக் பாலி கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் மோசமான செயல்பாடு காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரிடம் முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியா்களை பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் இணைக்க எங்கள் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், பாஜக இந்த முயற்சிக்குத் தடையாக உள்ளது.

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இஸ்லாமியா்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. எனவே, இதற்கு தடையாக உள்ள பாஜகவிடம் இருந்துதான் விலகியிருக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தாா்.

முன்னேப்போதும் இல்லாத வகையில் பாஜகவுடன் நிதீஷ் குமாா் நெருக்கமாக உள்ளாா். ஏற்கெனவே ஒருசில முறை பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் கைகோத்த அவா், இனி பாஜக கூட்டணியில் இருந்து விலகமாட்டேன் என்றும் கூறியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பு எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமா் மோடிக்கு எதிராக கூட்டணி அமைப்பதில் நிதீஷ் முக்கியப் பங்கு வகித்தாா். ஆனால், எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் நிதீஷுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததை அடுத்து பாஜகவுடன் கைகோத்தாா். மக்களவைத் தோ்தலில் பிகாரில் பாஜக-ஜேடியு கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

X
Dinamani
www.dinamani.com