
புது தில்லி: நாடு முழுவதும் உணவுப்பொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது ஏன் என்பது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பொது பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தார்.
வலுவான நிலையில்தான் இந்திய பொருளாதாரம் உள்ளது. 2024 - 25ஆம் நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 6.5 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார்.
நாட்டின் பொருளாதார செயல்பாடு, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், உறுதியற்ற உலகளாவிய பொருளாதார செயல்திறன் இருந்தபோதிலும் 2024ஆம் நிதியாண்டில் உள்நாட்டு வளர்ச்சி ஊக்கிகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர் மற்றும் மோதல்போக்குகள், நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் எதிரொலித்திருக்கலாம்.
நாட்டின் குறுகிய கால பணவீக்கமானது தீங்கிழைக்காது, ஆனால், நாட்டில், பருப்பு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட விலை உயர்வுகளால் அழுத்தம் கொண்டுள்ளது.
பொருளாதாரக் கணக்கெடுப்பானது, மாநிலங்கள் தங்களது திறனுக்குக் கீழான விவகாரங்களில், பிடியை விடுவித்துக்கொள்ளவும், தேவைப்படும் துறைகளில் திறனை மேம்படுத்தவும் வலியுறுத்துகிறது.
தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறாா்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததையடுத்து அவரே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.