தெரியுமா சேதி...?


உத்தர பிரதேசத்தின் மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாதின் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது லக்னௌ பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு வரும். அமைச்சர் ஏதோ தகவல் தரப் போகிறார் என்று விரைந்து செல்லும் அவர்களுக்கு லட்டு, ஹல்வா, ஜிலேபி உள்ளிட்ட இனிப்புப் பெட்டி காத்திருக்கும்.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டது. இதனால் ஏனைய பத்திரிகையாளர்களும், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகவியலாளர்களும் அமைச்சர் சஞ்சய் நிஷாதுக்கு எதிராக செய்திகள் வெளியிடத் தொடங்கிவிட்டனர். அதனால், செய்தியாளர் என்று யார் வந்தாலும் இனிப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் இருந்து உத்தரவு பிறந்தது.
மீன்வளத் துறை அமைச்சரின் அலுவலகம் மாதம் ஒருமுறை தவறாமல் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும். செய்தி காட்டுத் தீ போலப் பரவும். நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை உருவாக்கி சாதனை படைக்கத் தொடங்கினார் அமைச்சர் சஞ்சய் நிஷாத்.
ஆமாம், எதற்காக பத்திரிகையாளர்களை, அமைச்சர் இப்படி முனைந்து கவனிக்கிறார் என்பதைக் கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள். அமைச்சர் குறித்து, நல்லதோ கெட்டதோ எந்தச் செய்தியும் வெளியிடக் கூடாது என்பதற்காகத்தான் பத்திரிகையாளர்களுக்கு இந்த அன்பளிப்பும், உபசரிப்பும்.
சமீபத்தில் துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்த நாளில், வழக்கம்போல அமைச்சர் சஞ்சய் நிஷாதின் அலுவலத்தில் இனிப்புப் பொட்டலம் பட்டுவாடா செய்யப்பட்டது. "மௌரியாவின் விமர்சனத்தை சஞ்சய் நிஷாத் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்' என்று அவரது அரசியல் எதிரிகள் முதல்வர் யோகியிடம் போட்டுக் கொடுத்து விட்டார்கள்.
விஷயம் கேள்விப்பட்டுப் பதறிப்போன அமைச்சர், யோகி பாபாவின் காலில் விழுந்து வணங்கி, தன்னிலை விளக்கம் கொடுத்ததாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அவரிடம் இனிப்பு வாங்கும் பத்திரிகையாளர்கள்!.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...