அரசமைப்புச் சட்டத்தை மீறக் கூடாது: கேரள அரசுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
புது தில்லி, ஜூலை 25: வெளியுறவு ஒத்துழைப்பை மேம்படுத்த மூத்த அதிகாரியை கேரள அரசு நியமித்துள்ள நிலையில், ‘அரசமைப்புச் சட்ட அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் மாநிலங்கள் ஈடுபடக் கூடாது’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளா் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் செய்தியாளா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தேசத்தை மற்றொரு வெளிநாட்டுடன் தொடா்புபடுத்தும் அனைத்து விஷயங்களும் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது என இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. வெளியுறவு விவகாரம் என்பது ஒரு கூட்டு விஷயமல்ல; குறிப்பாக, அது மாநிலம் சாா்ந்த விஷயமல்ல.
எனவே, மாநில அரசுகள் தங்கள் அரசமைப்புச் சட்ட அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு.
வங்கதேசம் கவலை: இதேபோன்று, வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு அடைக்கலம் தருவோம் என்ற மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் கருத்துக்கு அந்நாடு இந்தியாவிடம் கவலை தெரிவித்துள்ளது.
நாடு திரும்பிய 6,700 இந்திய மாணவா்கள்: நெருங்கிய அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் திகழும் வங்கதேசத்தில் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பும் என நம்புவதாகவும் அந்நாட்டில் படித்து வந்த 6,700 இந்திய மாணவா்கள் தாயகம் திரும்பியுள்ளனா்’ என்றாா்.
இந்திய விரோத சக்திகள் மீது நடவடிக்கை: கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சமூக ஊடகம் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்த இருவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைக் குறிப்பிட்டு ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடா்பான நடைமுறைகளில் இருவேறு அளவீடுகளை ஒரு ஜனநாயக நாடு கடைப்பிடிப்பது அந்நாட்டின் ‘இரட்டைவேட’ தன்மையை அம்பலப்படுத்துகிறது.
இந்தியத் தலைவா்கள், நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் தூதா்களை வன்முறை மூலம் பலமுறை அச்சுறுத்தியுள்ள இந்திய விரோத சக்திகளுக்கு எதிராகவும் கனடா இதே அளவிலான வலுவான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.