
தில்லியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
தேசிய தலைநகர் தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதற்கிடையில், தில்லி மற்றும் என்சிஆர் பகுதியில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
தில்லியின் புராரி, மாடல் டவுன், காரவால் நகர், ஆசாத்பூர், டெல்லி பல்கலைக்கழகம், சிவில் லைன்ஸ், தில்ஷாத் கார்டன், சீமாபுரி, ரஜவுரி கார்டன் மற்றும் படேல் நகர் பகுதிகளில் காலை முதல் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.
நரேலா, அலிபூர், பாடிலி, பிடம்புரா, பஞ்சாபி பாக், சீலம்பூர், ஷஹாத்ரா, விவேக் விஹார், செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை, ராஜீவ் சௌக், ஐடிஓ, இந்தியா கேட், லோடி சாலை, ஆர் கே உள்ளிட்ட தில்லியின் சில இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது.
நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதையடுத்து சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு மற்றும் மத்திய தில்லியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. பல கீ.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அலுவலகத்திற்குச் செல்பவர்கள் உள்பட பலர் போக்குவரத்து நெரிசலில் சிக்சி தவித்து வருகின்றனர்.
மழை நீரோடு, கழிவு நீர், சாக்கடை கலந்து வெளியேறி வருவதால் அசோக் விஹார், ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் மாற்றுப்பாதையைப் பயன்படுத்த காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், தில்லி பல்கலைக்கழகத்தில் அதிகபட்சமாக 89.5 மி.மீ., இக்னோவில் 34.5 மி.மீ., பீடம்புரா, நாராயணா மற்றும் புஷ்ப விஹாரத்தில் 8.5 மி.மீ., பிரகதி மைதானத்தில் 6.5 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.