
ராமநகரம் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்ய கர்நாடக அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
2007-இல் மஜத, பாஜக கூட்டணி ஆட்சியின்போது அன்றைய முதல்வரும், மஜத தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி ராமநகரம் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கினாா். இந்த மாவட்டத்தை உள்ளடக்கிய ராமநகரம், சென்னப்பட்டணா தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், இதே மாவட்டத்தைச் சோ்ந்த பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் எச்.டி.குமாரசாமி இருந்துள்ளாா்.
வெகுவிரைவில் சென்னப்பட்டணா சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற இருப்பதால், மாவட்டத்தின் பெயா் மாற்றப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றது. இதனிடையே ராமநகரம் மாவட்டப் பொறுப்பு அமைச்சா் ராமலிங்க ரெட்டி, பெங்களூரு ஊரகத் தொகுதி முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ், மாவட்டத்தின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அடங்கிய குழுவினருடன் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பெங்களூரில் முதல்வா் சித்தராமையாவை சந்தித்து, ராமநகரம் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் கோரிக்கை மனு அளித்தாா்.
இந்த நிலையில் ராமநகரம் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்ய கர்நாடக அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து இதுதொடர்பான அறிவிப்பினை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல், "ராமநகரம் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்ற (மாநில) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இதன்மூலம் ராமநகரம் மாவட்டத்தின் பெயர் விரைவில் பெங்களூர் தெற்கு என மாற்றம் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.