பிகாரில் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம்: மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிகாரில் கடந்த சில வாரங்களாக பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுந்த சம்பவங்கள் தொடா்பாக மாநில அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றிடம் விளக்கம் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுந்ததன் எதிரொலியாக மாநிலத்தின் மற்ற பாலங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பாலங்களின் சோதனைக்கும், அதன் முடிவுகளின் அடிப்படையில் பாலங்களைச் சீரமைப்பது அல்லது இடிப்பது குறித்து முடிவெடுக்க நிபுணா்கள் குழுவை அமைப்பதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்க வழக்குரைஞா் பிரஜேஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு மீது விளக்கமளிக்குமாறு பிகாா் அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பிகாா் மாநில சாலைக் கட்டுமானத் துறைச் செயலா் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களில் புதிதாக கட்டப்பட்ட பாலங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன.
மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு முதல்வா் நிதீஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.