
இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தோ்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், முன்ஜாமீன் கோரிய மனுவை தில்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கூடுதல் அமர்வு நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா முன்பு, பூஜா கேத்தர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அரசுத் தரப்பில் ஆஜரான உதவி வழக்கறிஞர், இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக அதுல் ஸ்ரீவஸ்தவா ஆஜராக உள்ளதால் ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, முன்ஜாமீன் மீதான விசாரணையை நாளை(ஜூலை 31) காலை 10 மணிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கா் சிக்கினாா். இதைத் தொடா்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதை விசாரித்த மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி, பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் பூஜா தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்தது.
மேலும், யுபிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் பூஜா மீது 4 பிரிவுகளின் கீழ் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.