அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதலில், பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் சேர்த்து ஜூன் 4ஆம் தேதியே எண்ணப்படுவதாக இருந்த நிலையில், அருணாச்சலம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

காரணம், இரண்டு பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2ஆம் தேதியே நிறைவு பெறுகிறது என்பதால், ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையும்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அருணாச்சலில், நாளை மற்றும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு சுமார் 2000 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையானது காலை 6 மணிக்கும், ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கும் தொடங்கும் என்று அந்த மாநிலத்தின் முதன்மை தேர்தல் அதிகாரி பவன் குமார் செயின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிசா பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியே நடைபெறவிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தை பாஜக தலைமையிலான அரசு நடைபெறுகிறது. பீமா காண்டு முதல்வராக உள்ளார். சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைமையில் பிரேம் சிங் தமங் முதல்வராக உள்ளார்.

அருணாச்சலத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் முக்கிய கட்சியாக விளங்குகின்றன. பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன.

இங்குள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். அதனால், மீதமுள்ள 50 தொகுதிகளில்தான் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிமில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயகக் முன்னணி கட்சிகளுடன் பாஜக, காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com