
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆட்சியர்களுடன் தொடர்புகொண்டு பேசியதாக முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவகாசம் கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் அதனை இன்று (ஜுன் 3) நிராகரித்துள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அதனை நிராகரித்து இன்று இரவு 7 மணிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
ஜுன் 1ஆம் தேதி இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தற்போது வரை 150 மாவட்ட ஆட்சியர்களிடம் அமித் ஷா பேசியுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (ஜுன் 1) பதிவிட்டிருந்தார்.
இதன்மூலம் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை பாஜக இழந்துள்ளது வெளிப்படையாக தெரிவதாகவும், யாருடைய அழுத்தத்துக்கும் அஞ்சாமல் அரசமைப்பை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளை மக்கள் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை அளிக்குமாறு ஜெய்ராம் ரமேஷிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியது.
இதற்கு ஒருவாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் இருந்து கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கால அவகாசம் கோரி தாங்கள் வைத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும், இன்று (03.06.2024) இரவு 7 மணிக்குள், தாங்கள் வைத்த குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை /தரவுகளை பட்டியலிட்டு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு தவறும் பட்சத்தில், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பிலிருந்து தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை என்று கருதப்படும் என்றும், இது தொடர்பாக ஆணையம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.