
தேர்தல் விதிமுறைகளின்படி, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய அரை மணி நேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, தேர்தல் ஆணையர், செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை.
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அணையத்தில் மனு அளித்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், பாஜக, காங்கிரஸ் கொடுத்த புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பங்கேற்று, தேர்தல் திருவிழாவை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19-இல் தோ்தல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதியுடன் நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் நடந்த வன்முறைகளைத் தவிர வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.
ஜூன் 4ம் தேதி செவ்வாயன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.