தீவிரவாதியிடம் ஒமர் அப்துல்லா தோல்வி

தீவிரவாதியிடம் ஒமர் அப்துல்லா தோல்வி

ஒமா் அப்துல்லாவும், மெஹபூபா முஃப்தியும் தோல்வி
Published on

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லாவும், அனந்த்நாக்-ரஜெளரி தொகுதியில் களமிறங்கிய மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தியும் தோல்வியடைந்தனா்.

முன்னாள் முதல்வா்களான இவா்கள், அதிகம் பிரபலமில்லாத வேட்பாளா்களால் தோற்கடிக்கப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜெளரி, ஸ்ரீநகா் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஒமா் அப்துல்லாவை, சுயேச்சை வேட்பாளரான அப்துல் ரஷீத் சுமாா் 2 லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

முன்னாள் எம்எல்ஏவான ரஷீத், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின்கீழ் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கடந்த 2019-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

சிறையில் இருந்தபடியே சுயேச்சையாக போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். ரஷீத்துக்காக அவரது இரு மகன்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

தீவிரவாதியிடம் ஒமர் அப்துல்லா தோல்வி
பஞ்சாப்: சிறையில் இருந்தபடி வென்ற சீக்கிய மத போதகா்- இந்திரா கொலையாளி மகனும் வெற்றி

ரஷீத்துக்கு வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட ஒமா் அப்துல்லா, ‘தவிா்க்க இயலாத முடிவை ஏற்க வேண்டிய நேரமிது என நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற பொறியாளா் ரஷீத்துக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம் அவா் சிறையில் இருந்து விரைவில் விடுதலையாவாா் என்றோ, வடக்கு காஷ்மீா் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றோ நான் நம்பவில்லை. எனினும், ஜனநாயகத்தில் வாக்காளா்களின் முடிவே மேலானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அனந்த்நாக்-ரஜெளரி தொகுதியில் போட்டியிட்ட மெஹபூபா முஃப்தியை, தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரான குஜ்ஜாா் சமூகத் தலைவா் மியான் அல்தாஃப் சுமாா் 2.79 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

இதுகுறித்து மெஹபூபா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் தீா்ப்பை மதிக்கிறேன்; அனைத்து இடையூறுகளையும் கடந்து, தோ்தலில் பணியாற்றிய பிடிபி தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு நன்றி. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வெற்றி - தோல்வி என்பதெல்லாம் விளையாட்டின் ஓா் அங்கம். நமது பாதையில் தொடா்ந்து பயணிக்க எதுவும் நம்மை தடுக்காது’ என்று கூறியுள்ளாா்.

ஸ்ரீநகா் தொகுதியில் பிடிபி வேட்பாளா் வாஹீத் பாராவை தோற்கடித்து, தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா் அகா ரூஹுல்லா மெஹதி வெற்றி பெற்றாா்.

ஒமா் அப்துல்லா, மெஹபூபாவின் தோல்வியைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்த அப்னி கட்சி நிறுவனா் அல்தாஃப் புகாரி, இது குடும்ப அரசியலின் முடிவுக்கான அறிகுறி என்றாா்.

லடாக்கில்...: லடாக் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஷெரிங் நாம்கியாலை 27,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சுயேச்சை வேட்பாளா் முகமது ஹனீஃபா வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் தஷி கியாசனுக்கு மூன்றாவது இடமே (31,956 வாக்குகள்) கிடைத்தது.

X
Dinamani
www.dinamani.com