தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி, எந்தெந்த துறைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், பாஜக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவைப்படும் சூழல் எழுந்துள்ளது.
தில்லியில் தேர்தலுக்கு பிறகு புதன்கிழமை முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை(ஹிண்டே), லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய ஆட்சியில் முக்கிய பங்காற்றவுள்ளது. நேற்றையை கூட்டத்தில் மோடிக்கு அருகாமையில் சந்திரபாபு நாயுடு அமர்ந்திருந்தது அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் மக்களவைத் தலைவர் மற்றும் 5 அமைச்சர் பதவிகளையும், ஊரக மற்றும் நகர வளர்ச்சித்துறை, கப்பல் மற்றும் துறைமுகம், சாலை மற்றும் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை உள்ளிட்ட இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை, பாதுகாப்புத்துறை, ரயில்வே மற்றும் வேளாண் துறைகளையும், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியையும் நிதீஷ் குமார் கேட்டுள்ளார்.
மேலும், இரண்டு தலைவர்களும் தங்களின் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று பாஜகவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல், சிவசேனை(ஷிண்டே) ஒரு கேபினேட் மற்றும் இரண்டு இணையமைச்சர் பதவிகளையும், லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) ஒரு கேபினேட் மற்றும் இரண்டு இணையமைச்சர் பதவிகளையும் கேட்டுள்ளனர்.
பாஜக கூட்டணியில் போட்டியிட்டு பிகாரின் முன்னாள் முதல்வரும் மதச்சாா்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சாவின் தலைவருமான ஜித்தன் ராம் வெற்றி பெற்றுள்ளார். அவரும் கேபினேட் அமைச்சர் பதவியை கோரியுள்ளார்.
இந்த நிலையில், உள்துறை, ரயில்வே, நிதித்துறை, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகிய இலாகாக்களை தருவதற்கு பாஜக சமரசம் செய்து கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தனித்து போட்டியிட்டு வென்ற சிறிய கட்சிகளை சேர்ந்த 3 எம்பிக்கள் மற்றும் 7 சுயேச்சை எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
அமைச்சரவை பங்கீடு குறித்து பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் சூழலில், நாளை மறுநாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.