
புது தில்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நான்கு இணை அமைச்சர்கள் உள்பட 19 மத்திய அமைச்சர்கள் தோல்வியை தழுவியதால், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
18வது மக்களவைக்குத் தேர்வாக முடியாத சில பாஜக தலைவர்கள், மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பல்வேறு அமைச்சகங்கள் அதாவது, தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம், பெட்ரோலியம், வேளாண்மை, உணவு மற்றும் நுகர்வோர் நலன், ஜவுளித்துறை, இரும்பு, சுற்றுச்சூழல், திறன் மேம்பாடு, வேதியியல் மற்றும் உரத்தொழில், கூட்டுறவு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மற்றும் சிறுபான்மை நலன் போன்ற துறைகளை, பல்வேறு துறை அமைச்சர்களும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தனர்.
தற்போது கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் என்பதால் இது குறித்து ஆலோசனை நடத்தும்போது, மிக முக்கிய அமைச்சரவைகளை கூட்டணிக் கட்சிகளும் கோரும் நிலை ஏற்படலாம். எனவே, மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, வெளியேறும் அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 71 ஆக உள்ளது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 குறைவாகும்.
ஏற்கனவே, ஒரு சில அமைச்சகங்களை ஒன்றிணைக்கும் முன்முயற்சிகளும் எடுக்கப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, கூட்டணிக் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம்கொடுக்க வேண்டியது ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை உருவாக்கம் நிச்சயம் விவாதத்துக்கு வரும் என்று கூறப்படுகிறத.
கடந்த பத்தாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு சில அமைச்சரவைகளை தன்வசம் வைத்திருந்தார். அந்த நடைமுறை இப்போதும் தொடரலாம். எரிசக்தி மற்றும் புத்தாக்க திறன் அமைச்சரவை அதே அமைச்சரிடம் கொடுக்கப்படலாம். அதுபோல தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் வசம் கொடுக்கப்படலாம்.
கடந்த காலத்தில் கனரக தொழில்துறை, விமானப் போக்குவரத்து, எஃகு போன்ற துறைகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், இந்த முறை முக்கிய துறைகளை கூட்டணிகளுக்கு ஒதுக்க வேண்டிய அழுத்தத்தில் பாஜக உள்ளது.
இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம்கொடுக்க வேண்டியது உள்ளது. முக்கிய மாநிலங்களில் அதிகபட்ச எண்ணிக்கையில் வெற்றிபெற்று மக்களவைக்கு வந்த உறுப்பினர்களுக்கும் முக்கிய துறைகளை ஒதுக்கினால்தான், அந்த மாநில மக்களுக்கு ஆதரவு அளித்ததாகும். எனவே, இம்முறை ஒரு சில தென் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஒருபக்கம் ஒடிசாவில் அதிக தொகுதிகளில் பாஜக வென்றிருப்பதால், அதற்கு ஒரு அமைச்சரவை ஒதுக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும், உத்தரப்பிரதேசத்தில் இம்முறை குறைந்த தொகுதிகளே கிடைத்திருக்கிறது என்பதற்காக அதனை ஒதுக்கிவிட முடியாது. அதுபோல, மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியிலும், பிகார் தேர்தல் அடுத்த ஆண்டும் நடைபெறவிருப்பதால், இவற்றையும் பாஜக கூட்டிக்கழித்து கணக்குப்போட வேண்டும். இந்த மாநிலங்களிலிருந்து வரும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும். இந்த மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களை சமாளிப்பதுதான் கட்சித் தலைமைக்கு சற்று சவாலாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.