
இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பேசியது,
கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மத்தியில் அதன் பணி 24 மணி நேரமும், 365 நாள்களும் தொடர்கிறது, அவர்களின் பிரச்னைகளை எழுப்புகிறது.
ஆளும் கட்சியின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத வழிகளுக்கு எதிராக மக்கள் பேசியுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுக்கால அரசியலின் தீர்க்கமான நிராகரிப்பாகும்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ) எங்கெல்லாம் நடைபெற்றதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
மணிப்பூரின் இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றோம். நாகாலாந்து, அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். மகாராஷ்டிரத்தில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தோம்.
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற அனைத்து தரப்பு மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இது தவிர, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களுகளிலும், கிராமப்புறங்களிலும் கட்சிக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தனித்தனியான விவாதங்கள் விரைவில் நடத்தப்படும். அவசர சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்கள் கணிசமான நடவடிக்கைகளில் தங்கள் மீது நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர், அதை நாம் கட்டியெழுப்ப வேண்டும். தேர்தல் முடிவை உண்மையான பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.