
ஓபிசி பட்டியலின் கீழ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு நீடிக்கும் என்பதில் கட்சி உறுதியாக உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை பாஜக கடுமையாக கண்டித்து தேர்தல் பிரசாரம் செய்த நிலையில், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்திருக்கிறது.
நாரா லோகேஷ் இது பற்றி பேசுகையில், குறிப்பிட்ட சமூகத்தினர் ஏழ்மையில் உழலும்போது, ஒரு நாடோ அல்லது மாநிலமோ முன்னேற்றத்தைக் காண முடியாது. பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்துக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது ஒவ்வொரு அரசின் பொறுப்பு. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முடிவானது யாரையும் திருப்திப்படுத்துவதற்காகவோ, அரசியல் ரீதியான ஆதாயத்துக்காகவோ எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பெற்ற வெற்றி மூலம், மத்தியில் ஆளும் கட்சியை முடிவு செய்யும் கிங் மேக்கராக மாறினார் சந்திரபாபு நாயுடு. ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் பெற்ற 16 தொகுதிகள் மூலம், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக உதவியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 240 தொகுதிகளில் வென்றுள்ளது. மக்களவையில் பெரும்பான்மையை பெற இன்னும் 32 இடங்கள் தேவை என்ற நிலையில், ஒரு பக்கம் தெலுங்கு தேசமும், மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளித்து தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர உதவியிருக்கின்றன.
இதற்கிடையே இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில்தான் நிபந்தனையின்றி, தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டோம். நிபந்தனையின்றி, அக்கூட்டணியிலேயே தொடர்வோம். பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே தகுதியானவர் என நம்புகிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.